தாயக சிறுவர் கல்வி மேம்பாட்டு உதவித் திட்டத்திற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 26வது தடவையாக நடாத்திய சலங்கை பரதவிழா 08.02.2026 அன்று Drancy நகரசபை மண்டபத்தில், Drancy நகரசபை மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் உறுதுணையுடன் மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.10 மணிவரை அரங்க நிகழ்வுகள் நடைபெற்றது.
அரங்க வாசலின் வரவேற்பு நிறைகுட விளக்குகளை A.M International ஆடையக உரிமையாளர் திருமதி ஆனந்தி மற்றும் திருமதி. சிவதர்சினி இணைந்து ஏற்றி வைத்தனர். பிரதான பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக் கழக கௌரவ உறுப்பினர் திரு. பேதுருபிள்ளை ஜெயசூரியர் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவீரர்களையும், போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் மற்றும் மறைந்த அனைத்து மனிதநேய செயற்ப்பாட்டாளர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது ,
அரங்கின் மங்கள விளக்குகளை வருகை தந்திருந்த நடன ஆசிரியர்களுடன் இணைந்து Drancy நகரமன்ற உறுப்பினர் திரு. ஆலன் ஆனந்தன் ஏற்றி வைத்தனர்.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் கரவொலியுடன் பிரான்சில் புகழ்பூத்த 34 நடன ஆசிரியர்களின், 350 நடன மாணவ மாணவிகளின் 41 நடன வடிவங்கள் மேடையேற்றப்பட்டன. அனைத்து நடன மாணவ மாணவிகளும் ஒருவர்க்கு ஒருவர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி குருவிற்கும், தமை ஈன்ற பெற்றோர்க்கும், தமிழினத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
பரதவிழா இங்கு வாழும் எமது இளையோரின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே, பரதவிழாவினூடாக எமது தாயக உறவுகள் பயன்பெறுகின்றார்கள். அந்த பெருமையெல்லாம் நடன ஆசிரியர்களையும் , மாணவர்களையும் , பெற்றோரையும், வருகைதந்த மக்களையும், வர்த்தக ஆதரவாளர்களையும், தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்களையுமே சாரும்.
Drancy நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள், தமிழ்ச் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க உறுப்பினர்கள் நடன மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்விற்கான ஒலி அமைப்பினை அருள் சொனோ திரு. அருளானந்தன், தொழில்நுட்ப உதவி திரு. கரிகாலன், திரு. ரவிகாந்த், ஆவணப் படப்பிடிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பினை Lcast நிறுவனம் மேற்கொள்ள, புகைப் படப் பிடிப்பினை துலபன் 5G Entertainment நிறுவனமும், திரு. மணிவண்ணன் மற்றும் Frédéric Bidinger அவர்களும் பதிவுசெய்தனர். பார ஊர்திக்கான உதவியினை திரு. ரவிகாந்த் அவர்கள் வழங்கியிருந்தார். மேடை அலங்கார உதவி திரு. லிங்கம் அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினை திரு. த. விநாயகமூர்த்தி, திரு. சு. அருள்மொழித்தேவன், திருமதி. க. தாரணி, திரு. செ. சுகந்தன், செல்வி. கு. கஜதுர்க்கா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அரங்கம் நிறைந்த மக்களுடன் இப்பரதவிழா இனிதே நிறைவு பெற்றது.
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்














































