ப(ணி)யணங்கள் தொடரும் !

  • ஈழத்தமிழர்களின் மனிதநேயம் புதிய வடிவில் தடமமைக்கும்

1985ல் தொடங்கிய பயணம்!
மனிதநேயம் கொண்ட தலைவனதும், மூத்தவர்களினதும் தூரப்பார்வை பிரசவித்த நிறுவனம் நாலு தசாப்தங்களை கடந்து உலகளாவிய வலையமைப்புக் கொண்டதொரு தமிழர் மனிதநேய முகம் என்றதொரு அடையாளம் பொறிக்கப்பட்ட சர்வதேச தமிழர் நிறுவனமாக இயங்குகின்றது.
ஈழத்தமிழர் தாயகம் எதிர்கொண்ட அரசபடைகளின் வன்முறைகளினாலும், போரின் புற விளைவுகளாலும் ஏதிலிகள் ஆக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைக்கும் பெரும் பணிக்காக 1985ல் தோன்றிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போரின் இறுதிக் கணங்கள் வரை பெரும் களப்பணியாளர்களின் தன்னலமற்ற பணிகளுடன், மக்களை பாதுகாக்க விடாதுஉழைத்தது. இரத்தமும் – வியர்வையும் நிரம்பிய உழைப்பு. இப்பணிகள் முழுமையாக பதிவு பெறாத வரலாறுகளாகிவிட்டது.
மறுபுறம், சுனாமி எனும் பேரழிவு இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கு கரைகளை நொருக்கிய பொழுதில் மக்களுடன் நின்று மகத்தான பணிகளை புரிந்தது. அங்கீகரிக்கப்படாத தமிழீழ பிரதேசம் என அடையாளம் பெற்ற வன்னி பெருநிலப்பரப்பிலும், சிறீலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிற தமிழர் பகுதிகளிலும் ஆழிப் பேரலைகளின் பின்விளைவுகளை எதிர்த்து எமது நிறுவனம் போராடியதை சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும் அன்று வியப்புடன் பார்த்தன.
மற்றொரு தளத்தில், புலம்பெயர்ந்து உலகம் பூராவும் வாழும் தமிழர்களின் மனிதநேய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து புலத்தையும், தாயகத்தையும் இணைக்கும் தளமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தன்னை விரிவாக்கியது. புலத்தின் கரிசனைகள் அது வழங்கிய பலவித உதவிகள் ஊடாக தாயக மக்களை சென்றடையும் பொறிமுறையை நாம் கட்டி எழுப்பினோம்.

இத்தகைய பெரும் பணிகளால் சீற்றமுற்ற சிறீலங்கா அரசு இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினை முடக்க முயன்றுவருகின்றது. போர் முடிவடைந்து பதினேழு வருடங்கள் முடிவுற்ற பின்னரும், எமது நிறுவனத்திற்கு எதிரான பயங்கரவாத பட்டியல் நடவடிக்கைகளை சிறீலங்கா தொடர்ந்து வருகின்றது. இந்த வன்முறையை கைவிடுமாறு தொடர்ந்து பதவிக்கு வந்த சிறீலங்கா அரசுகளிடம் நாம் வேண்டிய போதும், மனிதநேயமற்ற முறையில் அவை அரசுகளால் நிராகரிக்கப்படுகின்றன. இன்றைய அனுரா அரசும் அதே பாதையில் பயணிக்கின்றது.

இன்றுள்ள சூழல் நிறுவனத்தின் செயற்படும் தளத்தினை மாற்றியுள்ளது. போரின் நேரிடையான ஏதிலிகள் எனும் சூழல் இல்லாது விட்டலும் , இன்றுவரை போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பெண்கள், ஊனமுற்றவர்கள், சிறையில் வாடும் தமிழர் குடும்பங்கள் திட்டமிடப்பட்ட முறையிலான உள்நாட்டு அரச உதவித்திட்டங்களோ, சர்வதேச உதவிகள்/கண்காணிப்புகளோ இல்லாது வாடுகின்றனர். கல்வி, பொருளாதார முயற்சிகள், பண்பாட்டு நடவடிக்கைகள் இந்த சமச்சீரற்ற சூழலினால் பாதிக்கப்படுகின்றது. அரசியல் தளத்தில் இயங்குவோர் இதனை இன ஒடுக்குமுறையின் மறைமுக வடிவம் என கருதுகின்ற போதும், நாம் இந்த பாதிப்புக்களுக்கு எதிரான மனிதநேய கரிசனை கொண்ட பன்முக நடவடிக்கைகள் இவை என்கின்ற புரிதலுடன் இயங்குகின்றோம்.
இன்றும் பலநூறு கணவரை இழந்த பெண்கள் குடும்பத்தை காப்பாற்ற ஏற்றுள்ள சிரமங்கள் பதிவுகளாகியுள்ளன.

போதிய ஆசிரியர்கள் அற்ற பள்ளிகள் தமிழர் தாயகத்தில் ஏராளமாய் உள்ளது. பொருத்தமான வேலைவாய்ப்பற்ற இளைய தலைமுறை பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்கின்றது. உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் என உதவி தேவைப்படும் பல தரப்புகள் எம் முன் துன்புறுகின்றனர்.
இதுவே சமகாலத்தில் எமது பணிகளை வடிவமைக்கும் தரவுகளாகும். இந்தத் தளத்தில் இயங்குவதற்கான மனித வலுவும், பொருளாதார பலமும் இன்று சர்வதேசரீதியில் திரட்டப்பட வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கினையும், மலையகம் உள்ளிட்ட பகுதிகளையும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அறிவுப்பலம், பொருளாதாரப்பலம், மனிதநேய எண்ணங்கள் என்பன கொண்டு காத்திடல் வேண்டும் என்பதே எம்முன்னுள்ள இன்றைய பணியாகும்.
இந்த தேவையின் நிமித்தம், புலம்பெயர்ந்த தமிழர் தளத்தில் பண்பாட்டு முயற்சிகள் ஊடாகவும், கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் ஊடாகவும், அடையாளதேடல்களை ஊக்குவிப்பதன் மூலமும், கற்கைகளை ஆதரிப்பதன் மூலமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச வலையமைப்பு தன்னை மீள் ஒழுங்குபடுத்த முயல்கின்றது.
இன்று வலுவான இளம்தலைமுறை அரசியல் தளத்தில் தம்மை நிலை கொள்ள வைக்கின்றனர். அமைச்சர்களாகவும், பாரளுமன்ற உறுப்பினர்களாகவும், நகர முதல்வர்களாவும் நகரசபை பிரதிநிதிகளாகவும் புதிய தலைமுறை சூழ் கொள்கின்றது. கல்வியாலும், உழைப்பாலும் உலகளந்த தலைமுறை எழுந்து நிற்கின்றது. எமது நோக்கம், இந்த தலைமுறையின் ஒரு முகமாவும், அடையாளமாகவும் நாம் சுமந்துவந்த வரலாறும், பண்பாடும் திகழ வேண்டும்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
40 ஆண்டு சேவை நிறைவு விழா சொல்லும் செய்தி

Défiler vers le haut