தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் 40ஆண்டுகால சேவைப்பெருவிழா

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் 40ஆண்டுகால பயணத்தை, சேவையை கெளரவிக்கவும், நினைவு கூரவும் ஊக்குவிக்கவும் 03.10.2026 அன்று சேவைப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நீண்ட பயணம்.

எமது தலைமுறைகள் கண்ட முடிவில்லாத துயர்களில் /வன்முறைகளில் / சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில்/சிக்குண்ட எமது மக்களை காத்திட நாம் வழங்கிய நீண்ட உழைப்பு மனக்கண்ணில் வந்து போகின்றது. உலகம் எங்கும் கிளைகள் பரவி ஈழத்தமிழர்களின் மனிதநேய முகமாக – பெரு விருட்சமாக நாம் நின்றமையை பெருமையுடன் நினைக்கின்றோம்.

மறுபுறம் இந்த பணிகளில் ஈடுபட்ட போது உயிரிழந்த – கொல்லப்பட்ட தொண்டர்களை கண்ணீருடன் நினைக்கின்றோம். இராணுவ துணைப்படைகளால் வன்கொடுமை செய்யப்பட்டு மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சகோதரிக்கு நீதி பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாக நாம் நிற்பதை வேதனையுடன் நினைக்கின்றோம்.

எமது இனத்தின் பயணம் வெற்றிபெற்றிருந்தால் இந்த நிகழ்வு தாயகத்தில் பெரு எழுச்சியாக நிகழ்ந்திருக்கும். நாற்பதாண்டு உழைப்பு கெளரவிக்கப்பட்டிருக்கும். கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும். நிறுவனம் முழுமையான சர்வதேச நிறுவனமாக அடுத்த தலைமுறைகளை உள்வாங்கி செழுமை பெற்றிருக்கும்.

1985ல் நிறுவனத்தை உருவாக்கும் நிகழ்வில் பங்குபற்றிய தலைவன் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்திருப்பார்.

ஆனால் புவிசார் அரசியலும், அறமற்ற நலன்சார் அரசியலும் எங்கள் அழகிய கனவை சிதைத்துவிட்டது.

இன்று நாம் ஒரு இனமாக ஒப்பீட்டளவில் அனாதையாய் நிற்கின்றோம். எதுவித நியாயமான நிரந்தர தீர்வுகளுமற்று, பாதுகாப்பற்று, எதிர்காலம் பற்றிய கேள்விக்குறிகளுடன் அனாதையாய் நிற்கின்றோம்.

இந்த அனாதை நிலையின் ஒரு குறியீடுதான் , உலகளாவிய அளவில் இடம்பெற வேண்டிய பெரு நிகழ்வு – இன்று பாரிசின் புறநகரொன்றில் மட்டும் நினைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்நிகழ்வு எம் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. நாம் எமது மக்களின் மனிதநேய செயற்பாடுகளுக்கான சுடரை 40 ஆண்டுகள் தாண்டி நூற்றாண்டுகளிற்கு எடுத்து செல்வோம் என்கின்ற உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகின்றது.

‘வீழ்வோமென நினைத்தாயா’ என சவால் விடும் எமது கூட்டு மனோநிலை இது.

நாம் இந்த 40 ஆண்டுகால பயணத்தின் அனுபவ செழுமைகளை அடுத்த தாசப்தங்களுக்கு கடத்துவது எமது வரலாற்று கடமை என்கின்ற புரிதலுடன் இயங்குகின்றோம்.

போர் முடிந்தது, தமிழர் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர், இனி TRO ற்கு என்ன வேலை எனக் கேட்கும் சில மனிதர்கள் மத்தியில் , TROவை ஏதோ எமது இலாபத்திற்காக நடத்துகின்றோம் என வஞ்சம் பாடும் கயவர்கள் மத்தியில், புலிகள் காலத்தில் உருவாகிய அனைத்து நிறுவனங்களையும் அழித்தொழிக்க முற்படும் எதிரிகள் மத்தியில் நின்று TRO ஒரு இனத்தின் கூட்டுழைப்பை சொல்லும் சர்வதேச தமிழர் மனிதநேய முகம் என்பதை பாதுகாக்கும் பெரு விருப்பம் இது.

இன்று நாம் பல முனை தடைகளை தாண்ட வேண்டியுள்ளது.

முதலில், எமது கட்டமைப்பை மீள நிலை நிறுத்த வேண்டும். அது கடந்த 17 ஆண்டுகளாக பலத்த சிரமமானதாக இருந்து. எமது அரசியல் சூழல் குழப்பபட்டு , போரடியவர்களை துரோகிகளாக்கி எதிரிகள் நடத்திய சதி அரசியல் எமது சமூகத்தின் வலுவை பலவாறு சிதைத்துவிட்டது. இந்த சேற்றிலிருந்து வெளியே நின்று நிறுவனத்தை பாதுகாக்க நாம் நடத்திய வேள்வி கடினமானது. அடுத்த தலைமுறைகள்வரை இந்த நாசகார கரங்கள் சிதைவை ஏற்படுத்திவிட்டது.

சமூக ஊடகங்கள் ஊடாகவும் , நேரடியாகவும் அச்சுறுத்தல்கள் , அவமானப்படுத்தல்கள் செய்யப்பட்டன.

எனினும் அறம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் இயங்கினோம் – இயங்குகின்றோம்.

நாற்பதாவது ஆண்டு கடந்துள்ள நிலையில் அடுத்த தசாப்த்திற்கான/நூற்றாண்டிற்கான பாதையை தீர்மானிக்க வேண்டும்.

கட்டமைப்பை வலுப்படுத்துவதை அவசர பணியாக மேற்கொள்ள வேண்டும். அதற்கான தெளிவான இலக்குகளும், கொள்கை திட்டமும், பணித்திட்டமும் தேவை.

கடந்தகாலத்தை மட்டும் காட்டி எதிர்காலத்தினை கட்டமைக்க முடியாது. எமது நிறுவனம் ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை தெளிவாக இருத்தல் வேண்டும்.

நாம் தாயகத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாகவே உருவாகினோம். வன்முறைகளினால் ஏற்பட்ட உடனடி நிவாரணம் எனும் தேவையும், இடம்பெயர்வு தொடர்புபட்ட தேவைகள் இன்று இல்லை . ஆனால், நாளை என்ன நடக்குமோ எனும் நிச்சயமற்ற அரசியல் சூழலே நிலவுகின்றது. எதுவித நிரந்தர அரசியல் தீர்வும் எட்டப்படாத சூழலில் எம்மக்களின் உதவிக்கான கரங்கள் இயங்கியே ஆகவேண்டும்.

இராணுவம் ஏன் தமிழர் தாயகமெங்கும் பரவி நிலை கொண்டுள்ளது?.

தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. பயங்கரவாத சட்டம் வேறு வடிவில் கொண்டுவரப்பட்டுள்ளது. எமது மனிதநேய நிறவனத்தை கூட இயங்க விடாது பயங்கரவாத அமைப்பாக கட்டமைக்க சிறீலங்கா அரசு முற்படுவது ஏன்? இந்த தடையை விலக்கி நாம் தாயக மக்களிற்கு உதவ வேண்டும் என கேட்டு நாம் பல முயற்சிகளை மேற் கொண்ட போதும் எதுவுமே கேட்கப்படவில்லை. ஏன்?.

இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போதும், வறுமை எமது அடித்தட்டு மக்களை பாதிக்கின்ற போதும், கல்வி மற்றும் பொருளாதார தேவைகள் எமது மக்களுக்கு தேவைப்படும் போதும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர் உதவிக்கரம் நீளவேண்டும்.

மறுபுறம் புலம்பெயர் தமிழர் மத்தியில் மனிதநேயத்துடனும், தாயகம் மீதான கரிசனையுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் இயங்கும் அனுபமும், கடமையும் நமக்குள்ளது.
இளைய தலைமுறைகளை ஒன்றிணைத்து வலுவான உலகதமிழர் வலையமைப்பாக திகழ முயல வேண்டும். இது பற்றிய விரிவான ஆய்வுகளை நாம் மேற் கொள்ள வேண்டும். இதற்கான வளங்களை கல்வி, பண்பாட்டு தளங்களில் திரட்ட வேண்டும்.
முக்கியமாக, சிறீலங்கா விதித்துள்ள நியாயமற்ற தடை முயற்சிகளுக்கு எதிராக எமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். சிறீலங்கா சர்வதேச மன்றுகளில் மனிதநேய நிறுவனத்திற்கு எதிரான தடைக்கு பதில் கூற வைக்க வேண்டும்.

முடிவாக, நண்பர்களே தோழர்களே நாம் இயங்குவது எமது தாயகத்தின் தேவைகளுக்கும், பாதுகாப்புக்குமான தேவை என்ற உறுதிமொழியை எடுத்து முன்னோக்கி நடப்போம்!

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் – பிரான்ஸ்
04.10.2026

Défiler vers le haut