தமிழர் விளையாட்டு விழா 2025

பத்திரிகைச் செய்தி
21.06.2025

அனைத்து பிரான்ஸ் தமிழர் கலை பண்பாடு, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் சமூக நிறுவனங்களுக்கான அழைப்பு

அனைவரும் வாருங்கள்..!!!

பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்களுக்காக, குறிப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளின் நலன்களுக்காக, கால்நூற்றாண்டுகளுக்கு முன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழர் விளையாட்டு விழா கருக்கொண்டது. அது பிரான்ஸ் தமிழ்ச்சமூகம் தன் இருப்பை பிரதான பிரெஞ்சு நீரோட்டத்தில் பதிவு செய்யும் நோக்கினை செயற்திட்டமாகக் கொண்டு பயணத்தினை செழுமைப்படுத்தி வந்தது. உள்நாட்டு அரசியற் தலைவர்கள், தேர்வுசெய்யப்பட்ட மக்கள், பிரநிதிகள் மற்றும் சமூக நிறுவனங்களை உள்வாங்கியதாக நிகழ்வு வளம் பெற்றது.

தமிழர்கள் அடையாளங்களுடன் இவ்வாறு வலுப்பெறுவதை விரும்பாத சக்திகள் இடையூறுகள் செய்த போதும் பிரான்ஸ் கட்சி அரசியலைத் தாண்டி இடதுசாரி – வலதுசாரி அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நிகழ்வு செழுமை பெற்றது.

2009ற்குப் பிற்பாடு ஏற்பட்ட கடும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் தமிழர் திருவிழா – விளையாட்டு பெருவிழா நிகழ்வினை அடுத்த தலைமுறையின் தேவைகளுக்காகவும், நலன்களுக்காகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இந்நிகழ்வினை பாதுகாத்து கால்நூற்றாண்டு கடந்த நிகழ்வாக மாற்றியுள்ளது.

இவ்வாண்டு யூலை மாதம் 6ம் திகதி வழமைபோல் La Courneuve, Le Bourget, Dugny திடலில் நிகழ்வு சிறப்புற இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள் – கலை பண்பாட்டு நிகழ்வுகள் – பலவித வேடிக்கை நிகழ்வுகள் என்பனவற்றுடன் தாயக சுவையுடன் கூடிய உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள், சமூக சேவை மையங்கள் அன்று முழுப்பொழுதும் இயங்கும்.

பிரான்ஸ் அரசியல் பிரமுகர்கள், நகரபிதாக்கள், சமூக தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் நமது மக்கள் சமூகமாக ஒன்று கூடும் திருநாள் .

பிரான்ஸ் தமிழ்மக்களின் அடையாளங்களை தனித்துவமானதாக வெளிக்காட்டும் இந்நிகழ்வினை பலவீனப்படுத்த பலவித முயற்சிகள் ஆங்காங்கே உருவாகிவருவதை காணமுடிகின்றது. தமிழர் அடையாளங்களை பின்தள்ளி வேறு அடையாளங்களை தந்து பிரான்ஸ் தமிழர்கள் என்ற வலுவை சிதைக்கும் முயற்சியாகவே இவையுள்ளன. இந்நிலையில் பொதுநோக்கமும் – எமது அடுத்த தலைமுறையினை பாதுகாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையும் கொண்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றுதிரண்டு தமிழர் திருவிழா – தமிழர் விளையாட்டுவிழா என்ற நிகழ்வினை பாதுகாக்க ஒருங்கிணைந்து பங்குபற்றுவது முக்கியமானது என கருதுகின்றோம்.

எனவே சமூக நலன் சார்ந்த அமைப்புகள், தமிழர் கட்டமைப்புக்கள் அனைவரையும் பங்குபற்றுமாறும் ஆதரவு வழங்குமாறும் அன்புடனும் – உரிமையுடனும் அழைக்கிறோம்.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

ஏற்பாட்டுக்குழு
தமிழர் விளையாட்டு விழா
21.06.2025

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut