கனவுகளின் பூச்சுகளுக்குள் சில விதைகள்

26-04-2026
கனவுகளை படைப்புகளாக பிரசவிக்கும்போது கைதட்டலும் பாராட்டும் புகழும் குவியும்; ஆனால் அது மக்களின் வாழ்வை வளப்படுத்தாது. மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்றால் மக்களின் வாழ்வு முறையை படைப்பாக உருமாற்றி அவர்கள் முன் நிறுத்துங்கள். அதுவே மக்களுக்கு நாம் செய்யும் மகத்துவம். நாங்கள் வாழும் நாடுகளின் கலைமுகம் செயல்வீச்சு கொண்டது; அதன் வீரியத்தை நாமின்னும் உணரவில்லை. இன்னும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்காக நின்று கனவுகளுக்கே நிறம் பூசுகிறோம். அந்த வகையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் பிரான்ஸ்) ஒழுங்கமைக்கப்பட்ட “அlfa செந்தமிழ் மாலை” ரத்தி ஆதித்தன் MCSAI ஆகியோரின் கந்தர் கோட்டம் பாடலுடன் 25-04-2026 மாலை 11:45 அளவில் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

TRO அமைப்பினரால் “அlfa செந்தமிழ் மாலை” என்னும் கலை நிகழ்வரங்கு சுஜித் ஜீ சந்தோஸ், கதிரவன் குட்டிகரி, ரத்தி ஆதித்தன் MCSAI போன்ற மக்கள் அறிமுகமான கலைஞர்களுடன் வளர்ந்து வரும் கலைஞர்களையும் உள்வாங்கி அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வு 25-04-2026 மாலை 6 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும், 7 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலோடு மக்களின் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. 3000 இருக்கைகளை கொண்ட சிறந்த ஒலி, ஒளி அமைப்பை கொண்ட அரங்கமானாலும் எம்மக்களால் 1000 பேரே வர முடிந்தது. அவர்களுக்கு எம் கலைஞர்களின் மீதான அன்பும் அக்கறையும் அளப்பரியது.

நிகழ்வின் அனைத்து கலைஞர்களின் ஆற்றுகையும் சிறப்பானதாக இருந்தாலும், சுஜித் ஜீ , சந்தோஸ், கதிரவன் குட்டிகரி, ரத்தி ஆதித்தன் MCSAI போன்றோரின் ஆற்றுகை இந்த அரங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அதைவிட அரங்கத்தின் தொழில்நுட்ப இயக்கமான ஒலி மற்றும் ஒளி அமைப்புகள் அதன் உயிர் போன்று செயற்பட்டது. நல்ல ஒலி அமைப்பு இல்லையெனில் பாடலின் உணர்ச்சி, இசையின் தாளம், குரலின் ஆழம் அனைத்தும் பார்வையாளர்களைச் சேராது. அதேபோல் சரியான ஒளி அமைப்பு இல்லையெனில் மேடையின் அழகு, நடனத்தின் இயக்கம், கலைஞர்களின் வெளிப்பாடு முழுமையாக தெரியாது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒலி, ஒளி அமைப்புகள் நிகழ்ச்சியை ஒரு சாதாரண நிகழ்விலிருந்து ஒரு முழுமையான அனுபவமாக மாற்றியது. இசை தாளத்துடன் ஒளி அசைவுகள் இணையும் போது பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்குள் மூழ்கும் உணர்வைப் பெறுகிறார்கள். இதுவே ஒரு அரங்கை மகிழ்வூட்டும், நினைவில் நிற்கும் கலை அனுபவமாக மாற்றும் முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த தொழில்நுட்பத்தை தனது ஒவ்வொரு அரங்கத்திலும் தனது தேடலால் சிறப்பாக துலாபன் கையாண்டிருந்தார்.

அண்மைக் காலமாக பிரான்சில் தொடர்ச்சியாக நடைபெறும் இசை அரங்க ஆற்றுகைகள் முழுக்க முழுக்க ஈழத் தமிழ் மக்களால் வடிவமைத்து அரங்கேற்றப்படுகின்றன. அதில் இந்திய தமிழ் நாட்டுக் கலைஞர்களையும் உள்வாங்கும் அரங்கங்கள் தமிழ் பார்வையாளர்களின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி பெருந்திரளான மக்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. அதேநேரம் கலைஞர்களின் பிரபலத்தன்மையும் அதற்கு பெரும் உறுதுணையாக நிற்கிறது. அதனைத் தாண்டி ஈழக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட “எங்கட பெடியள்” அரங்கத்தையும் “அlfa செந்தமிழ் மாலை” அரங்கத்தையும் நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும்.

“எங்கட பெடியள்” அரங்கமானது கலை வெளிப்பாடு, படைப்புகளில் உள்ளடக்கம், அரசியல் விமர்சனங்கள் என பலதரப்பட்ட விவாதங்களை ஏற்படுத்தினாலும், புலத்தில் வாழும் கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் நிகழ்வுகளை நடத்தும் போது அது அங்குள்ள தமிழ் சமூகத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது. வெளிநாட்டு வாழ்வில் பலருக்கும் மொழி, கலாசாரம், பாட்டு, நாடகம் போன்ற அடையாளச் சுவடுகள் மங்கும் சூழலில், தாயகத்திலிருந்து வரும் கலைஞர்கள் அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அவர்களின் படைப்புகள் நிலத்துடனான பிணைப்பை நினைவூட்டும் நிலம்சார் நினைவுகளாக மாறுகின்றன. ஒரு நிகழ்வின் வழியாக ஒரே இடத்தில் கூடும் மக்கள் நீண்ட நாள் பிணைப்புகளை மீண்டும் கண்டுபிடிக்கிறார்கள்; இதன் மூலம் பகிரப்பட்ட உணர்வு தோன்றி, நிலத்திற்கும் புலம்பெயர் மக்களுக்குமிடையில் சமூக ஒருமை வலுப்படுகிறது. புலம்பெயர் மக்களுக்கு தங்களின் வேரோடு இணைந்திருக்கும் உணர்வு கிடைக்கிறது. இவ்வாறு புலத்திலிருந்து வருபவர்கள் சாதாரண கலைஞர்கள் அல்லாமல் தாயக அடையாளத்தை பாதுகாத்து, தலைமுறைகளுக்கு பரிமாறும் கலாசாரத் தூதுவர்களாகின்றனர்.

அதேநேரம் “அlfa செந்தமிழ் மாலை” பல்சமூக, மொழி, கலாசார சூழலில் பிறந்து வளரும் எம் கலைஞர்களின் படைப்புகளை முதன்மைப்படுத்தும் அரங்கமாக இருப்பதால், புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களுக்கு தங்கள் மொழி, கலை, இசை மற்றும் மரபு அடையாளங்களை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இளம் தலைமுறைக்கு தாய்மொழி மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களின் மீது ஆர்வமும் பற்றும் உருவாகிறது. பல்வேறு சமூகங்களுடன் இணைந்து வாழ்வோர் கலைப்படைப்புகளை உருவாக்குவதால் தமிழ்க் கலாசாரம் தனிமைப்படாமல் உலக கலாசாரப் பரிமாற்றத்தில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்துகிறது. அதேசமயம் புலத்திலிருந்து வரும் கலைஞர்களுக்கும் புலம்பெயர் கலைஞர்களுக்கும் ஒருங்கிணைந்த மேடை கிடைத்து, படைப்பாற்றல் வளர்ச்சி மற்றும் அனுபவப் பரிமாற்றம் மேம்படுகிறது. இதன் மூலம் தமிழ் கலை ஒரு நிலையான சமூக வலையமைப்பாக விரிவடைந்து, அடையாளப் பாதுகாப்பும் சமூக ஒருமைப்பாடும் மேலும் வலுப்பெறுகின்றன.

“அlfa செந்தமிழ் மாலை” ஈழ ராப் இசை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு சினிமா பாடல்கள், நடன வடிவங்கள் ஆகியவற்றையும் இணைத்து உருவாக்கப்பட்ட பன்முக அரங்கமாக இருந்தது. இதில் ஈழக் கலைகள் தனிமையான குரலாக இல்லாமல் மற்ற தமிழ் இசை வடிவங்களுடன் உரையாடும் நிலை உருவாகிறது. இதனால் ஈழக் கலை வெளிப்பாடு போராட்டம், வரலாறு மட்டும் அல்லாமல் உணர்ச்சி, கொண்டாட்டம் மற்றும் கலாசார இணைப்பாகவும் விரிகிறது. அதே நேரம் சினிமா பாடல்கள் மற்றும் பொதுவான நடன நிகழ்வுகள் பெரும்பாலும் உடனடி ரசனைக்காக உருவாக்கப்படுகின்றன. அவை மக்களை விரைவாக ஈர்க்கும் திறன் கொண்டவை. இதனால் நிகழ்ச்சியின் கவனம் அதிகமாக “தமிழ் நடனம் என்றாலே பரதநாட்டியம்” என்பதுபோல் கோடம்பாக்கப் பார்வைக்குள் முடக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது ஈழ ராப் போன்ற சமூக அனுபவம் கொண்ட இசையின் ஆழமான கருத்துகள் பின்னுக்கு தள்ளப்படலாம். பிரபலத்தன்மை இல்லாத ஆழமான அர்த்தமுள்ள பாடல்களும் இரசிப்பு தன்மையற்றதாகி விடலாம்.

நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் வருமானம் மற்றும் பிரபலத்தன்மை முக்கியமாக பார்க்கப்படலாம். அதிகமாக பிரபலமான பாடல்களுக்கு இடம் அதிகரிக்கும்போது, ஈழக் கலைக்கான அரசியல், வரலாற்று அல்லது அடையாளக் கதைகள் குறைந்த நேரத்தில் சுருக்கப்படலாம் அல்லது முழுமையாக வெளிப்படாமல் போகலாம்.

பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் ஒரு காரணம். பொதுவாக பார்வையாளர்கள் அறிமுகமான சினிமா பாடல்களை அதிகம் ரசிக்கிறார்கள். இதனால் ஈழக் கலை “முதன்மையானதாக” இல்லாமல் மீண்டும் மீண்டும் “துணைப் படைப்பாக” மாறுகிறது.

இதனால் தான் சமநிலை முக்கியம் என்று சொல்கிறோம்—அதாவது பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் ஈழக் கலைக்கான ஆழமான உள்ளடக்கம் முழுமையாக வெளிப்படவும் வேண்டும். இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வடிவமைப்பில் கவனம் கொள்வதன் மூலம் சிறந்த ஒன்றையும் எமது மக்களை சர்வதேச அளவிலான படைப்பு இரசிப்பாளர்களாக மாற்றவும் முடியும்.

“அlfa செந்தமிழ் மாலை” நிகழ்வு வருடாவருடம் நடைபெறும் சிறந்த எதிர்கால மேடையாக உருவாக வேண்டும். அது எம் கலைக்கும், எம் மக்களுக்கும், எம் கலைஞர்களுக்கும் வாழ்வாக உயரட்டும்.

நன்றி
பார்தீபன் பத்மநாதன்

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut